வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

Site is Under Construction, Coming Soon!!!

மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்

 

 

✴ இந்தியாவிலேயே, விவசாயிகளிடையே வேளாண் இயந்திரமயமாக்கலைப் பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் அனைத்து வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து தனித்துவம் வாய்ந்த “மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்” சென்னை, அண்ணா சாலையில் நந்தனம் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மைப் பொறியியல் துறை, தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் சுமார் 27,142 சதுர அடி பரப்பளவில் ரூபாய் 8.89 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது

✴ இம்மையத்தில் ஒரே கூரையின் கீழ் வேளாண் பொறியியல் நடவடிக்கைகளான வேளாண் இயந்திரமயமாக்கல், விளைப்பொருட்களை மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள், மரபு சாரா ஆற்றல் தொழில்நுட்பங்கள், மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

✴ மேலும், இந்த தகவல் மையத்தில் வேளாண் கருவிகளை உற்பத்தி செய்யும் 56 முன்னணி நிறுவனங்கள் தங்களது வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தியுள்ளன. தற்போது வேளாண்மைப் பணிகளுக்கு அதிகளவில் பயன்பாட்டில் உள்ள நவீன ரக டிராக்டர்கள், பவர்டில்லர்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

✴ நிலத்தை தயார் செய்வதிலிருந்து அறுவடை வரை பயன்படுகின்ற நவீன கருவிகளான சுழல் கலப்பைகள், திருப்பும் வசதி கொண்ட வார்ப்பு இறகுக் கலப்பை, பல்வேறு விதை நடவு கருவிகள், தானியங்கி நெல் நாற்று நடவு இயந்திரம், களையெடுக்கும் இயந்திரங்கள், தீவனப் பயிர் வெட்டும் கருவி, கரும்பு சோகை வெட்டும் கருவி, தேங்காய் மட்டை உரிக்கும் கருவிகள், பல்வகை தானியங்கள் கதிரடிக்கும் கருவி, வைக்கோல் கட்டும் கருவிகள், வேளாண் கழிவுகளை துகளாக்கும் கருவிகள், பருத்தி பறிக்கும் கருவி போன்றவை பயிர்கள் வாரியாக வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

✴ நீர் மேலாண்மை பயன்பாட்டுக்கு உதவுகின்ற பல்வேறு நிறுவனங்களின் நுண்ணீர்ப் பாசன அரங்குகள், பாசன மோட்டார் பம்பு செட் அரங்குகள், ஆக்சிஜனேற்றியுடன் கூடிய மாதிரி பண்ணைக் குட்டை மற்றும் தானியங்கி நீர்ப்பாசன மாடித் தோட்டம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.

✴ வேளாண் பதப்படுத்தும் மற்றும் மதிப்புக்கூட்டும் இயந்திரங்களான பலவகை தானியங்களிலிருந்து எண்ணெய் பிழியும் மரச்செக்கு இயந்திரங்கள், ஏலக்காய் உலர்த்தும் கருவி, நிலக்கடலை தோல் நீக்கும் கருவி, தானியங்களிலிருந்து கல் நீக்கும் கருவி, பருப்பு உடைக்கும் இயந்திரம், வெங்காய சேமிப்பு அமைப்பு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

✴ மரபு சாரா ஆற்றல் தொழில்நுட்பங்களான சூரிய மின்வேலி, சூரியக் கூடார உலர்த்தி மற்றும் சூரியசக்தி பம்பு செட் போன்றவைகளின் இயக்க மாதிரி அமைப்புகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

✴ இதன் மூலம் விவசாயிகள் மற்றும் படித்த இளைஞர்கள் ஒரே இடத்தில் வேளாண் பொறியியலின் அனைத்து தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது.

✴ மேலும் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடுகளை விளக்கும் ஒளி மற்றும் ஒலி விளக்கக்காட்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சமாக வருங்கால தலைமுறையினருக்கு வேளாண் இயந்திரங்களின் பரிணாமத்தை உணர்த்தும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைமை வாய்ந்த தொழில்நுட்பங்களை விளக்கும் 42 வகையான வேளாண் கருவிகளின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

✴ இத்தகவல் மையம் முன்னணி நிறுவனங்களிடமிருந்து 6 மாத காலத்திற்கு வாடகை வருமானமாக அரசிற்கு ரூ.30,98,000 இலட்சத்தினை இதுவரை ஈட்டியுள்ளது. இம்மையத்தினை விவசாய பெருமக்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் கட்டணமின்றி இலவசமாக பார்த்து பயன்பெற்று வருகின்றனர்.

✴ மேலும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மூலம் நடத்தப்படுகின்ற விவசாயிகள் பயிற்சியின் மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளை அழைத்து வந்து காண்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர்களையும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலமாக அழைத்து வந்து இம்மையத்தினை காண்பிக்கப்படவும் உள்ளது.

 

logo image